குலசை தசரா திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்குகிறது.

தசரா திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்படும் மங்களகரமான நிகழ்வு நடைபெறுகிறது.

தசரா துர்கா

தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிவதற்காக மாலை அணிந்து தீவிர விரதத்தைத் தொடங்கியுள்ளனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கோவில் பூசாரியிடம் காப்பு கட்டித் தங்கள் நேர்த்திக்கடனைத் தொடங்குகின்றனர்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் முக்கியச் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.

குலசை தசரா

திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் 1,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.