இன்று முதல் ஆயுஷ் டிப்ளமோ பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - அக்.29 கடைசி தேதி!
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஓமியோபதித்துறை ஆணையரகம் இதற்கான இணையவழி விண்ணப்பங்களை இன்று முதல் வரவேற்றுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnayushselection.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டண முன்பணம் ஆகிய அனைத்துக் கட்டணங்களையும் ஆன்லைன் முறை மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். அனைத்து விதமான பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக வரும் அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கடைசி வரை காத்திருக்காமல் உரிய அவகாதத்திற்குள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
