தமிழறிஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - டிசம்பர் 11 கடைசி தேதி!
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தூய தமிழ் பயன்பாட்டிற்கும் அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடகங்களைக் கௌரவிக்கும் விதமாக, 2026-ஆம் ஆண்டிற்கான பல்வேறு விருதுகளுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை அங்கீகரிக்கும் வகையில், 5 பிரிவுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன:
தமிழ் மொழி ஆராய்ச்சி மற்றும் சொற்பிறப்பியல் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கியம் மற்றும் அகராதியியல் பணிகளில் முத்திரை பதித்தவர்களுக்கு வீரமாமுனிவர் விருது வழங்கப்படுகிறது.

பிறமொழி கலப்பின்றித் தூய தமிழில் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில் தூயதமிழ் ஊடக விருது வழங்கப்படுகிறது.
மரபுக் கவிதைகள் மற்றும் நற்றமிழ்ப் பாடல்கள் மூலம் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் கவிஞர்களுக்கு நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படுகிறது.
அன்றாட வாழ்விலும், பொதுவெளியிலும் தூய தமிழைப் பயன்படுத்திப் பரப்புரை செய்யும் ஆர்வலர்களுக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்படுகிறது.
தகுதியும் விருப்பமும் உள்ள தமிழறிஞர்கள் மற்றும் அமைப்புகள் இணையதளம் வழியாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் http://sorkuvai.tn.gov.in அல்லது http://awards.tn.gov.in ஆகிய தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகள் வாயிலாகத் தங்களது விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 11, 2026 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழியின் தொன்மையையும் தூய்மையையும் போற்றிப் பாதுகாக்கும் அறிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
