எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 27 வரை அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவிற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 3:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாச நீட்டிப்பே மாணவர்களுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பு என்றும், இதன் பிறகு எக்காரணம் கொண்டும் மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தகுதியுடைய மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஜூலை 27, பிற்பகல் 3:00 மணி வரை மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் ஏற்படும் இணையப் நெரிசல் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, விருப்பமுள்ள மாணவர்கள் கடைசி தருணம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
