அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை உயர்கல்வித்துறை தற்போது நீட்டித்துள்ளது.
நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். எனினும், பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு இந்த நீட்டிப்பு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதுவரை விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எங்கும் நேரில் செல்லத் தேவையில்லை, தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே இணையதளம் வழியாக இந்தச் சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்யலாம்.
மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமான இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். www.tngasa.in இணையதளப் பக்கத்திற்குச் சென்று, மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் விபரங்கள் மற்றும் தேவையான இதர விபரங்களைச் சரியாகப் பதிவு செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திப் பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் வேளையில், கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை உறுதி செய்யும் வகையில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வு விபரங்கள், இந்த கூடுதல் விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தவுடன் இணையதளத்தில் தனியாக வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
