தேவாவின் இறுதி நொடிகள்.. மரணத்திற்கான காரணம் என்ன? - மருத்துவர்கள் விளக்கம்!

 
தேவா

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா (75) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவரது இறுதி நிமிடங்கள் மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலவரம் குறித்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனை மருத்துவர்கள் ஊடகங்களுக்கு விரிவான விளக்கமளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவாவுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருக்குச் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரைச் சூர்யா மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் போதே எந்தவிதமான நாடித் துடிப்பும், இதயத்துடிப்பும் இல்லாத ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளார்.

மருத்துவர்கள் உடனடியாகச் செயற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிரச் சிகிச்சையைத் தொடங்கினர். இதயத்தை மீண்டும் இயங்கச் செய்ய சி.பி.ஆர். மற்றும் கார்டியாக் ஷாக் உள்ளிட்ட அனைத்து விதமான நவீன அவசர மருத்துவ உதவிகளையும் அளித்து, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினர்.

எவ்வளவோ முயன்றும் அவரது இதயத்துடிப்பை மீண்டும் மீட்க இயலவில்லை. இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈ.சி.ஜி. பரிசோதனைக்குப் பிறகே அவர் உயிர் பிரிந்துவிட்டதை உறுதிசெய்த மருத்துவர்கள், குடும்பத்தினருக்குத் தகவலைத் தெரிவித்தனர். தீவிர மாரடைப்பு காரணமாகவே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். 

தேவா

எளிய மக்களின் இசையான கானா பாடல்களைத் தமிழ் சினிமாவின் மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவந்து கொடிகட்டிப் பறந்த தேவா அவர்களின் மறைவுத் செய்தி, திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களை மீளாத் துயரிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் முழுமையான அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.