இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் இடதுசாரிகள் !
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும், இடதுசாரி கட்சிகள் (சிபிஐ மற்றும் சிபிஎம்) தனி அணியாகச் செயல்பட்டுப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆளுநர் மூலம் ஆட்சி அமைவதைத் தவிர்க்கும் நோக்கத்திற்காக மட்டும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், கம்யூனிஸ்டுகளின் இந்தத் திடீர் முடிவு ஆளும் தவெக வட்டாரத்திலும் அரசியல் களம் முழுவதிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. இருப்பினும், அவர்கள் தவெக அமைச்சரவையில் பங்குபெறவில்லை. தவெக தோழமை கட்சிகளின் கூட்டங்களையும் கூட இடதுசாரிகள் புறக்கணித்து வந்தனர்.

இடதுசாரிகளின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கட்சித் தலைவர்கள் தரப்பில், கொள்கை ரீதியாகத் தவெக ஆட்சியில் அங்க வகிக்காமல் வெளியில் இருந்தே ஆதரவு அளித்து வருகிறோம். மக்கள் அதிகாரத்தைக் காப்பதற்காக மட்டுமே இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படுகிறதே தவிர, இது தவெக உடனான நிரந்தரத் தேர்தல் கூட்டணி அல்ல.
வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தங்கள் சொந்தப் பலத்தை அறியும் வகையில் தனித்து அல்லது தனி அணியாகக் களம் காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு கிடையாது என இடதுசாரிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளதால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை எந்த நேரத்திலும் கம்யூனிஸ்டுகள் திரும்பப் பெறக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த முடிவும், 'இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு' மூலம் அவர்கள் தனி அணியாகத் திரள்வதும், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
