இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை... 24 மணி நேரமும் பெண் போலீசார் ரோந்து - அவசர எண் 100 அறிவிப்பு!

 
சிங்கப்பெண் சிங்கப்பெண்

சென்னை எழும்பூரில் நேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', இன்று முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக  ரோந்துப் பணிகளைத் துவக்கியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுமையாக ஒடுக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் மொத்தம் 270 பிரிவுகளாக இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படை விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன் முதல்கட்டமாக, இன்று முதல் மாநிலம் முழுவதும் 70 சிங்கப்பெண் சிறப்புப் படைகள் களத்தில் இறங்கி மிடுக்காக வலம் வரத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு சிறப்புப் படை பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சிங்கப்பெண்

தலைநகர் சென்னையில் மட்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 12 சிங்கப்பெண் படைகள் அதிரடி காட்டப் போகின்றன. மேலும், தாம்பரம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனரகங்களுக்குத் தலா 4 சிங்கப்படைகளும், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இதர மாநகர போலீஸ் கமிஷனரகங்களில் தலா 2 சிங்கப்படைகளும் இன்று முதல் தங்களது பாதுகாப்புப் பணிகளைத் துவக்கியுள்ளன.

இந்தச் சிறப்புப் படையில் முழுக்க முழுக்கப் பெண் போலீசாரே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும், 420 பெண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சிங்கப்படையிலும் 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி ரோந்து வருவார்கள். எனினும், பெண் போலீசாருக்குக் கார் டிரைவர் உள்ளிட்ட சில அவசரத் துணைப் பணிகளில் மட்டும் ஆண் போலீசார் உதவி செய்ய உள்ளனர்.

சிங்கப்பெண்

பாதிக்கப்படும் பெண்கள் அல்லது அவசரக் காலங்களில் இருக்கும் கல்லூரி மாணவிகள், இந்தச் சிங்கப்படையை மிக எளிதாகத் தொடர்பு கொள்வதற்காகத் தனிப் பிரத்யேக 'வாட்ஸ்-அப்'  குழுக்கள் மற்றும் பிரத்யேக செல்போன் எண்கள் ஆகியவை இன்னும் சில தினங்களில் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை, ஆபத்தில் இருக்கும் பெண்கள் பயன்பாட்டில் உள்ள போலீஸ் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் '100' என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படைகளின் பயன்பாட்டிற்காக முதல்கட்டமாக ரூ.354 கோடி நிதியில் 319 நான்கு சக்கர வாகனங்களும், 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்தச் 'சிங்கப்பெண்' திட்டம் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று முதல் காலிப் பயல்களின் கொட்டத்தை அடக்கப் பெண் சிங்கங்கள் களம் இறங்கியிருப்பது இல்லத்தரசிகள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பைத் தரும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.