“நல்லகண்ணு அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது... மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர்” - ரஜினிகாந்த் இரங்கல்!
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். நல்லகண்ணு அவர்களின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவரது நேர்மை மற்றும் கொள்கை உறுதியைப் பாராட்டியுள்ளார்.
"மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்" என ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கடந்து அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு தலைவராகத் திகழ்ந்த நல்லகண்ணு அவர்களுக்கு, திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் விடுத்துள்ள இந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நல்லகண்ணு அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகைகள் அனைத்தையும் சமூக நலனுக்காகவும், கட்சி நிதிக்குமே வழங்கிவிட்டு, வாடகை வீட்டிலும் எளிமையான சூழலிலும் வாழ்ந்தவர். சுதந்திரப் போராட்டம் முதல் மணல் கொள்ளைக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் வரை, தமிழகத்தின் நலனுக்காக 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்தவர்.
நல்லகண்ணு அவர்களின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3:30 மணிக்கு அவரது இறுதிப்பயணம் நடைபெற்று, அவரது விருப்பப்படியே உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது.
