தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது... இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்ததன் தாக்கத்தால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரப் பகுதியில் உள்ள கலிங்கப்பட்டினம் அருகே கரையை அடைந்தது. இதன் காரணமாக வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பமான சூழல் மாறி இந்த மழையின் காரணமாகச் சில பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
