“தவெக அரசுக்கு மதிமுக கேடயமாக இருக்கும்.. “ - ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் வைகோ பேட்டி!
தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் உள்கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலகல் விவகாரங்கள் உச்சக்கட்டப் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், "முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக வீசப்படும் கணைகளுக்கு மறுபுறம் கேடயமாக மதிமுக இருக்கும்" என்றும், "திமுவுடன் இனி எந்தவொரு ஒட்டும், உறவும் வேண்டாம் என்பதே தங்களது தொண்டர்களின் கருத்து" என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மலர் வளையம் வைத்துத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, ஆளுங்கட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜய்க்குத் தனது முழு ஆதரவை வைகோ வெளிப்படுத்தியுள்ளார். "முதலமைச்சர் விஜய் அவர்களின் புதிய அரசுக்கு எதிராக எதிரணியில் உள்ள கட்சிகளிலிருந்து வீசப்படும் அனைத்து விதமான அரசியல் கணைகளுக்கும், கடுமையான விமர்சனங்களுக்கும் எதிரான ஒரு பலத்த கவசமாகவும், பாதுகாப்புக் கேடயமாகவும் மறுபுறம் மதிமுக உறுதியாகத் துணை நிற்கும்."
தொடர்ந்து பேசிய வைகோ, தங்களது கட்சியின் தற்போதைய உட்கட்சி நிலை குறித்தும், திமுக உடனான உறவு குறித்தும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். "மதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் திடீரென மாயமாகிவிட்டனர். அவர்கள் மாற்று முகாமிற்குச் செல்லப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது."
"கடந்த சில காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து, திமுக-வுடன் இனி எவ்விதமான ஒட்டு, உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் மதிமுக தொண்டர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்; அதுவே ஒட்டுமொத்தக் கட்சியின் தொண்டர்களின் கருத்தாகவும் உள்ளது" என்று வைகோ திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன், திமுக உடனான உறவை முறித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்புமுனையையும், பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
