நாளை வானில் நிகழும் அதிசயம்... 14% பெரிதாக... 30% அதிக பிரகாசத்துடன் தோன்றும் 'பீவர் சூப்பர் மூன்' - வெறும் கண்களால் பார்க்கலாம்!

 
பெரிய நிலா நிலவு பீவர் சூப்பர் மூன்

வானியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் நாளை நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு வானில் 'பீவர் சூப்பர் மூன்'  எனப்படும் பிரமாண்ட முழு நிலவு காட்சியளிக்கவுள்ளது. வழக்கமான பௌர்ணமி நிலவை விட மிகப் பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் இந்த முழு நிலவு தோன்றவுள்ளதால் வானியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது, பூமிக்கு மிக அருகாமையில் வரும் நாளில் முழு நிலவு பௌர்ணமி தோன்றினால், அதனை வானியலாளர்கள் 'சூப்பர் மூன்' என அழைக்கின்றனர்.

ரத்த நிலா

வழக்கமான முழு நிலவு நாட்களில் காணப்படுவதை விட, சூப்பர் மூன் நிகழ்வின்போது நிலவு சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது.

வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில், நவம்பர் மாதத்தில் கடுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக நீர்நாய்கள் தங்களது இருப்பிடங்களையும் அணைகளையும் பாதுகாப்பாகத் தயார்படுத்திக் கொள்ளும் காலமாக இது கருதப்படுகிறது. இதன் காரணமாகவே நவம்பர் மாதத்தில் தோன்றும் முழு நிலவிற்குப் பாரம்பரியமாக 'பீவர் மூன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நிலா ஸ்ட்ராபெர்ரி

2026-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் தொடர்ச்சியான மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகளில் இது முதலாவதாகும். இதனைத் தொடர்ந்து வரும் 2026 டிசம்பர் 23/24 மற்றும் 2027 ஜனவரி 22 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த சூப்பர் மூன்கள் வானில் தோன்றவுள்ளன.

நாளை நவம்பர் 24-ம் தேதி மாலை சூரியன் மறைந்த பிறகு, கிழக்குத் திசையில் நிலவு உதயமாகும் நேரத்தில் இதைப் பார்ப்பது மிகவும் பிரமாண்டமாகவும் கண்கவர் காட்சியாகவும் இருக்கும். இந்த வானியல் அதிசயத்தைக் காண்பதற்குத் தொலைநோக்கி போன்ற எந்தவொரு சிறப்புக் கருவிகளும் தேவையில்லை; மேகமூட்டமில்லாத தெளிவான வானம் இருந்தால் வெறும் கண்களாலேயே பொதுமக்கள் அனைவரும் இதனைத் தெளிவாகக் கண்டு ரசிக்கலாம்.