எம்.எல்.ஏ. நாற்காலியில் மாறி மாறி அமர்ந்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகிகள்.. வைரலாகும் வீடியோ!
சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்.எல்.ஏ-வின் அதிகாரப்பூர்வ நாற்காலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் மாறி மாறி அமர்ந்து 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் சிலர் ஏதோ ஒரு பணிக்காக வந்துள்ளனர். அப்போது அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், மக்கள் பிரதிநிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலியில் தன்னிச்சையாக அமர்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, அந்த நாற்காலியில் ஒவ்வொருவராக மாறி மாறி அமர்ந்து, பின்னணியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய ஒரு அரசு அலுவலகத்தில், பொறுப்பற்ற முறையில் த.வெ.க. நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியின் நாற்காலிக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. அதனை உணராமல், ஒரு அரசு அலுவலகத்தை அத்துமீறிப் பொழுதுபோக்குத் தளமாக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது" என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மாற்று அரசியல் பேசும் ஒரு புதிய கட்சியின் நிர்வாகிகள், அரசு சொத்துக்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாளுவதா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசு அலுவலகத்திற்குள் வெளியாட்கள் நுழைந்து, அதுவும் எம்.எல்.ஏ-வின் பிரத்யேக நாற்காலியில் அமர்ந்து வீடியோ எடுக்க அனுமதித்தது யார்? அப்போது அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் ஏன் தடுக்கவில்லை? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் த.வெ.க. தலைமைக்கும், உள்ளூர் கட்சி வட்டாரத்திற்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கட்சி ரீதியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
