உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக வந்த 'மாடல் சோபா' - சமூக வலைதளங்களில் வைரலாகும் சுவாரசியம்!
திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிச் சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அவர் வாழ்த்துப் பெற்றபோது, திமுக நிர்வாகி ஒருவர் வழங்கிய சிறிய 'மாடல் சோபா' பரிசு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் சுவாரசியமான கவனத்தைப் பெற்றுள்ளது.
பிறந்தநாளையொட்டிச் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்திற்குக் காலை முதலே திரண்டு வந்த திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்குப் பூங்கொத்து, புத்தகங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது வாழ்த்துத் தெரிவிக்க வந்த திமுக நிர்வாகி ஒருவர், சிறிய அளவிலான மாடல் சோபாவை உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அதனைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்ட உதயநிதியின் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே அண்மைக்காலமாக ‘சோபா மாடல்’ என்ற அரசியல் விமர்சனம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இத்தகைய அரசியல் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளில் நிர்வாகி ஒருவர் குறியீடாகச் சிறிய மாடல் சோபாவை பரிசாக வழங்கியிருப்பது, தொண்டர்களிடையே உற்சாகத்தையும் சமூக வலைதளங்களில் பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது.
