தலைமையாசிரியரிடம் கைகூப்பி கெஞ்சிய தாய்... பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பள்ளியில் சேர்க்கச் சென்ற போது, தாயின் கைகளைத் தட்டிவிட்ட மாணவியை தலைமையாசிரியர் கண்டித்ததால், மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தவமணி என்பவரது 16 வயது மகள் நிஜந்தி, பத்தாம் வகுப்புக்குப் பிறகு நர்சிங் பிரிவில் படிக்க விரும்பியதால் சில காலம் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மகளை உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகத் தாய் தவமணி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தலைமையாசிரியர் விமலா முன்னிலையில் விசாரித்தபோது, தாய் தவமணி கைகளைக் கூப்பியவாறு தலைமையாசிரியையிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார்.

தற்கொலை

தாயார் கைகூப்பி நிற்பதைக் கண்ட மாணவி நிஜந்தி, உடனடியாகத் தனது தாயின் கைகளைத் தட்டிவிட்டுள்ளார். மகளின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் நிஜந்தியைத் கண்டித்துள்ளார்.

தலைமையாசிரியர் கண்டித்ததால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் காரணமாக மாணவி நிஜந்தி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.