தமிழக அரசின் முடிவுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் கடும் எதிர்ப்பு!

 
நாகூர் தர்கா

உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்காகத் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் சந்தனக் கட்டைகளை, தர்கா நிர்வாகம் சாராத தனி நபரிடம் வழங்கத் திட்டமிட்டிருப்பதற்கு நாகூர் தர்கா நிர்வாகம் மற்றும் கமிட்டியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாகத் தமிழக முதலமைச்சரே நேரில் நாகூர் தர்கா நிர்வாகத்தினரிடம் உரிய மரியாதையுடன் சந்தனக் கட்டைகளை வழங்குவது பல ஆண்டுகாலமாகத் தொடரும் பாரம்பரிய நடைமுறையாகும்.

நாகூர் தர்ஹா

ஆனால், இம்முறை அரசியல் தலையீடு காரணமாக, தர்காவின் முறையான மற்றும் சட்டப்பூர்வ நிர்வாகத்திடம் சந்தனக் கட்டைகளை வழங்காமல், நிர்வாகம் சாராத தனி நபர் ஒருவரிடம் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தர்கா கந்தூரி விழா

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள தர்கா கமிட்டியினர், முறையான நிர்வாகத்திடம் சந்தனக் கட்டைகளை வழங்க ஏற்பாடு செய்யப்படாத காரணத்தினால், அரசு வழங்க முன்வரும் சந்தனக் கட்டைகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.