திமுக திட்டங்களின் பெயர் மாற்றம்.. தவெக அரசுக்கு MLA சிவசங்கர் கண்டனம்
திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றியதாகக் கூறி, தவெக அரசுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட முக்கியத் திட்டங்களான நான் முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்டப் பல முன்னோடித் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றியமைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ சிவசங்கர், "முதலமைச்சர் என்ற வார்த்தையைக் கேட்டாலே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயர் மட்டுமே நினைவுக்கு வருகிறது. சொந்தமாகப் புதிய திட்டங்களை உருவாக்க முடியாமல், தனது நிர்வாக இயலாமையை மறைப்பதற்காகவே திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வருகிறது" என்று அவர் சாடினார்.
திமுகவின் சாதனைகளை மக்கள் மனதில் இருந்து மறைக்க முடியாது எனவும், பெயர் மாற்றும் அரசியலை விடுத்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்
