திணறுது தேசிய நெடுஞ்சாலை... கிளாம்பாக்கத்திலும் கூட்டம்... ஒரே நேரத்தில் சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள்!

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை (ஆகஸ்ட் 14, 15, 16) முன்னிட்டுப் பயணிகள் ஊர்களுக்குச் செல்ல வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 14) 505 பேருந்துகளும், நாளை (ஆகஸ்ட் 15) 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு மற்றும் மாதவரம் முனையங்களில் இருந்து திருவண்ணாமலை, ஓசூர், புதுச்சேரி, வேலூர் போன்ற வழித்தடங்களுக்குக் கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர்

வார விடுமுறை முடிந்து பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) மீண்டும் சென்னை திரும்ப வசதியாக 465 சிறப்புப் பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வார விடுமுறையுடன் சுதந்திர தினமும் இணைந்து தொடர் விடுமுறையாக வருவதால், சென்னை கிளாம்பாக்கம் மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கக் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை நோக்கி வருவதாலும், தனியார் கார்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் படையெடுப்பதாலும் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பாதையில் நெரிசல் அதிகரித்துள்ளது. 

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் தீபாவளி நெரிசல் சொந்த ஊர்

கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையிலேயே பேருந்துகளை நிறுத்திப் பயணிகளை ஏற்றி இறக்குவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பேருந்துகளும் முனையத்தின் உள்ளே சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையிலான திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு நெரிசலைச் சீரமைத்து வருகின்றனர். பயணிகள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கத் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வப் போக்குவரத்து இணையதளம் அல்லது செயலி மூலம் முன்கூட்டியே பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.