நீட் போராட்டம்... மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது டெல்லி அரசு!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகக் கடந்த காலங்களில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்களின் போது சட்ட ஒழுங்குப் பிரச்சினை எனக் கூறி பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற டெல்லி மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

போராட்டத்தின் போது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவிற்குப் பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
