அதிகாரிகளின் அலட்சியம்.. மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் ஆறாய் ஓடும் சாக்கடை கழிவுநீர்!

 
மதுரை சாக்கடை கழிவுநீர்

மதுரை மாநகராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே உடைந்தும், சாலைகளில் ராட்சத குழிகள் ஏற்பட்டும் குடியிருப்புப் பகுதிகள் முழுவதிலும் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலாக வைகை ஆற்றின் தெற்குப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வைகை ஆற்றின் வடக்கே உள்ள வார்டுகளிலும் இப்பணி விரிவுபடுத்தப்பட்டது.

மதுரை சாக்கடை கழிவுநீர்

ஆனால், இவ்வளவு நீண்ட கால வரலாறு கொண்ட இந்த இரண்டு பாதாள சாக்கடை கட்டமைப்புகளும் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படாமலும், முறையான பராமரிப்பு இன்றியும் தற்போது முற்றிலும் சிதைந்து போய்விட்டன. இதன் காரணமாக மழைக்காலம் மட்டுமல்லாது, சாதாரண வெயில் காலங்களில்கூட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவது வாடிக்கையாகியுள்ளது.

குறிப்பாக, மதுரை மாநகராட்சியின் 10, 12, 14 மற்றும் 15 ஆகிய நான்கு வார்டுகளில் கடந்த 6 மாத காலத்திற்குள் மட்டும் இது நான்காவது முறையாகக் கழிவுநீர் குழாய் உடைந்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

கோ.புதூர் கற்பக நகர் 3-வது தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையம் முன் திடீரென அழுத்தம் அதிகரித்துப் பாதாள சாக்கடை குழாய் வெடித்தது. இதனால் அப்பகுதியில் திடீரெனச் சாலை உள்வாங்கி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் உணர்ந்த மாநகராட்சி ஊழியர்கள், இந்த நீரேற்று நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் குழாய்களைத் தற்காலிகமாக அடைத்து வைத்துச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை சாக்கடை கழிவுநீர்

இதன் தாக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் மேன்ஹோல்களில்இருந்து கழிவுநீர் பொங்கித் தெப்பம் போல் தேங்கத் தொடங்கியுள்ளது. டி.ஆர்.ஓ. காலனி அருகே உள்ள மருதுபாண்டியர் 2-வது தெரு மற்றும் சர்வயேர் காலனி சாலைகளில் கழிவுநீர் ஆறு போல ஓடுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்குத் துர்நாற்றமும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இப்பிரச்சினை குறித்துக் கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், "மாநகராட்சியில் தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், வார்டுகளில் ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகள் எங்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பது இல்லை. தற்போதைய உள்ளாட்சி மற்றும் அரசியல் சூழலில், மக்களுடைய கோபம் கவுன்சிலர்கள் மீது திரும்பும் வகையில் அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியமாகச் செயல்படுகிறார்கள். மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் இந்தச் சூழலில், அதிகாரிகள் செய்யும் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முறையான பராமரிப்பு இன்றித் தரைமட்டத்திற்குக் கீழே சீரழிந்துள்ள பாதாள சாக்கடை அமைப்புகளை உடனடியாக மாற்றி அமைத்து, நிரந்தரமான பாதுகாப்பான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.