நவ.1 முதல் புதிய வருடாந்திர பாஸ் திட்டம் அமல்.. யாருக்கு எவ்வளவு கட்டணம்? - முழு விவரம்!

 
சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைச் சுற்றி வசிக்கும் உள்ளூர்வாசிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், 'பாஸ்டேக்' அடிப்படையிலான புதிய வருடாந்திர பாஸ் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்கள், தங்களின் வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு மாதம் ரூ.350 வீதம் கட்டணம் செலுத்தி மாதாந்திர டிஜிட்டல் பாஸ்களை புதுப்பித்து வந்தனர்.

ஒவ்வொரு மாதமும் கட்டணத்தைப் புதுப்பிப்பதில் நிலவி வந்த சிரமங்கள் குறித்துப் பொதுமக்கள் அளித்த புகார்களை அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் இந்த புதிய வருடாந்திர பாஸ் திட்டத்திற்கு மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த பாஸ் திட்டத்திற்கான கட்டணங்கள் இரண்டு பிரிவுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டோல்கேட்

நகராட்சி/நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகள்: வருடாந்திரக் கட்டணம் ரூ.1,500. நகராட்சி/நகர எல்லைக்கு உள்ளே உள்ள சுங்கச்சாவடிகள்: வருடாந்திரக் கட்டணம் ரூ.3,000

சுங்கச்சாவடியை ஒட்டி 20 கிலோமீட்டர் எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் முகவரிச் சான்று மற்றும் வாகன ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி மையங்களில் சமர்ப்பித்து இந்த வருடாந்திர பாஸ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சுங்கசாவடி டோல்கேட்

சுங்கச்சாவடிக்கு அருகில் மாற்றுப்பாதை (Alternate route) அல்லது சேவைச் சாலை  இருக்கும் பட்சத்தில், உள்ளூர் மக்களுக்கான இந்த வருடாந்திர சலுகைப் பாஸ் வழங்கப்பட மாட்டாது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு, தினமும் சுங்கச்சாவடிகளைக் கடந்து பயணிக்கும் கிராமப்புற மற்றும் நகரப் பகுதி உள்ளூர்வாசிகளுக்குப் பெருமளவில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.