ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. இனி டிஜிட்டல் கரன்சி தான்!

 
ரேஷன்

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையில் மத்திய அரசு தற்போது அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி உணவு தானிய மானியம் வழங்கும் முன்னோடித் திட்டத்தைப் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்துள்ளார்.

நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தில் சில சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக 'டிஜிட்டல் ரூபாயை' பயன்படுத்தும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை அந்த்யோதயா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு அரிசிக்கு பதிலாக அதற்கான பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், மக்கள் இந்தப் பணத்தை உணவுப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தாமல் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தவிர்க்கவே, உணவுப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படும் வகையில் டிஜிட்டல் டோக்கன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேஷன் ஊழியர்

பயனாளிகளின் மொபைலில் உள்ள சிபிடிசி வாலெட்களில் மானியத் தொகை 'டிஜிட்டல் டோக்கன்கள்' வடிவில் வரவு வைக்கப்படும். இந்த டோக்கன்களை நியாய விலைக் கடைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பயன்படுத்த முடியும். உணவு தானியங்களை வாங்கும்போது மொபைலில் உள்ள க்யூ ஆர் கோடு அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் வரும் கூப்பனைத் திரையிட வேண்டும். கடைக்காரர் அதை ஸ்கேன் செய்தவுடன் அவருக்கான தொகை அரசு தரப்பிலிருந்து டிஜிட்டலாகச் சென்றடையும்.

இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் காகித நோட்டுகளுக்கு இணையான சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் வடிவிலான இந்திய ரூபாய் ஆகும். சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளைப் போலன்றி, இதற்கு வங்கி கணக்கு கட்டாயம் தேவையில்லை; டிஜிட்டல் வாலட் மூலமே பணத்தைப் பரிமாற முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

ரேஷன் சர்க்கரை

புதுச்சேரியில்அந்த்யோதயா குடும்பங்கள் (35 கிலோ அரிசி) மானியம் : ₹1,559.90. அதே போன்று முன்னுரிமை குடும்பங்கள் (நபருக்கு 5 கிலோ) மானியம் : ₹222.85. இந்தத் தொகை இனி பணமாக வராமல், டிஜிட்டல் டோக்கன்களாக மட்டுமே வரும். இந்தத் திட்டம் தற்போது புதுச்சேரியில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைக் கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.