அடுத்த அதிரடி... திருச்செந்தூரில் முடி இறக்கும் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்; உரிமமும் ரத்து!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை நடத்திய ரகசிய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
அமைச்சர் எனத் தெரியாமல் அவரிடமே விஐபி தரிசனத்திற்காக லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உள்ளிட்ட 3 கோயில் நிர்வாகிகள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூலித்த மேலும் இருவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் கோயிலுக்குள் நடத்திய அடுத்தகட்ட ஆய்வின் போது, மொட்டை அடிக்கும் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடம் அங்கிருந்த பணியாளர்கள் சிலர் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்தன. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி, பக்தர்களிடம் சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு மொட்டை அடித்ததாக முடி இறக்கும் பணியாளர்கள் சங்கர் மற்றும் நாகராஜ் ஆகியோர் மீது முறைகேடு புகார்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, விதிகளை மீறிச் செயல்பட்ட பணியாளர்கள் சங்கர், நாகராஜ் ஆகிய இருவரையும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் கோயிலுக்குள் இனி பணி செய்ய முடியாதவாறு அவர்களது தொழில் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தரிசனத்திற்குப் பணம் கேட்ட அர்ச்சகர் அய்யப்பன், அதற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் என அடுத்தடுத்துப் பலரையும் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்து வரும் அமைச்சர் ரமேஷின் இந்த அதிரடி ஆக்ஷன் தற்பொழுது முடி காணிக்கை செய்யும் இடத்திற்கும் நீண்டுள்ளது.
கோயிலுக்கு வரும் சாமானிய பக்தர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஊழியர்கள் மீது உடனுக்குடன் பாயும் இந்தத் தொடர் நடவடிக்கைகள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பொதுமக்களிடையே பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
