அடுத்த சர்ச்சை... விஜய்யின் வரி ஏய்ப்பு வழக்கை நடத்திய வழக்கறிஞர் தலைமை வழக்கறிஞராக நியமனம்!

 
விஜய் நாராயண் விஜய் நாராயண்

தமிழக அரசியலில் விஜய்யின் வருகைக்குப் பிறகு, ஒவ்வொரு நியமனமும் பெரும் விவாதங்களை கிளப்பி வருகிறது. அந்த வரிசையில், தற்போது தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். 

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காருக்கான நுழைவு வரி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்தச் சமயத்தில், விஜய்க்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் இதே விஜய் நாராயண் தான். 2021-ல் இந்த வழக்கு பெரும் பேசுபொருளான போது, விஜயின் தரப்பு நியாயங்களை முன்வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி விஜய்

விஜய் நாராயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின் போதும் இவர் இதே பதவியை வகித்துள்ளார். தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் மீண்டும் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு வேறுபட்ட கட்சிகளின் ஆட்சியில் ஏ.ஜி-யாகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பெறுகிறார்.

விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவரை முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமித்து ஒரு அரசாணை வெளியானது. இது 'பகுத்தறிவு' பேசும் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் அந்த நியமனத்தை அரசு ரத்து செய்தது. இத்தகைய பரபரப்பான சூழலில், தனக்கு நெருக்கமான மற்றும் திறமையான சட்ட வல்லுநர்களைத் தனது அணியில் இணைத்துக் கொள்ள முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஜோதிடர்

சட்டத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் மருமகன் ஆவார். 1982-ல் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். மெட்ராஸ் பார் அசோசியேஷனின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தனது தனிப்பட்ட வழக்குகளைக் கவனித்த நம்பிக்கைக்குரிய ஒருவரை, மாநிலத்தின் மிக உயரிய சட்டப் பதவியில் அமர வைத்திருப்பது விஜய்யின் 'விசுவாச' அரசியலைக் காட்டுவதாக ஒரு தரப்பும், தகுதியின் அடிப்படையில் தான் இந்த நியமனம் நடந்துள்ளதாக மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றனர்.