அதிமுகவில் வெடித்தது அடுத்த கலகம்.. "எங்களை நீக்க இபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை" - எஸ்.பி.வேலுமணி காட்டம்!

 
எஸ்.பி.வேலுமணி எடப்பாடி எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் ஒழுங்கு நடவடிக்கைகள் செல்லாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, கட்சியின் தலைமை மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பின்வரும் அதிரடி கருத்துகளை முன்வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்து வரும் எந்த நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது. நிர்வாகிகளைப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடையாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் இப்போதும் அதே பதவிகளிலேயே தொடர்கிறோம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

எடப்பாடி

கட்சியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். உடனடியாக அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி, கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கான உண்மையான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும். கட்சியை வலுப்படுத்த, பல்வேறு காரணங்களால் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் என அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.

எடப்பாடி

ஏற்கனவே கே.பி. முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை உறுதிப்படுத்திப் பேசி வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணியின் இந்த நேர்மாறான கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ்-ன் நடவடிக்கைகளை பகிரங்கமாக எதிர்த்து வேலுமணி பேசியிருப்பது, அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தொண்டர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.