தமிழகத்தில் அடுத்த பரபரப்பு... பல ஆயிரம் கோடி ஊழல்... 21 நகரங்களில் ரெய்டு - 56 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 
அமலாக்கத்துறை

கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வு முறைகேடு மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை விவகாரத்தில், மத்திய அமலாக்கத்துறை தனது வேட்டையைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நேரத்தில் 21 முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் கூட்டுவதற்காக இடைத்தரகர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாகப் கைமாறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான பணமோசடி வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் இறங்கினர்.

அமலாக்கத்துறை

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கிய 21 நகரங்களில் இந்தச் சோதனை ஒரே நேரத்தில் அரங்கேறியுள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள், தகுதியற்ற தேர்வர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது தொடர்பான மிக முக்கியமான டைரிகள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கணக்கில் வராத ரூ.13.18 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை இந்தச் சோதனையில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்வு ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் இடைத்தரகர்களின் நிதி ஆதாரங்களை முற்றிலுமாக முடக்கும் நோக்கில் அமலாக்கத்துறை அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

முறைகேடுப் பணம் கைமாறியதாகக் கண்டறியப்பட்ட தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான 56 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.