தமிழகத்தில் அடுத்த பரபரப்பு... ஜெயலிதாவாக நடிக்கிறார் த்ரிஷா - எகிறும் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவின் சகாப்தமாகவும், தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாகவும் விளங்கிய ‘புரட்சித் தலைவர்’ பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவிப் புதிய திரைப்படம் ஒன்று பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகித் தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ‘பசும்பொன் தேவர்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துத் தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஜெ.எம்.பஷீர். அதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பாகவும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற பாசம், மரியாதை காரணமாக அவரது லட்சியப் பாதையை உலகறியச் செய்யும் நோக்கில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து ஜெ.எம்.பஷீர் கூறுகையில், "நான் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால், அவரது லட்சியங்களும் மனிதநேயமும் என்னை ஈர்த்துள்ளன. எம்.ஜி.ஆரின் புகழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இப்படம் அமையும். பெரிய கல்வியாளர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலரும் என்னை நேரில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆரின் ஆளுமையை முழுமையாக உள்வாங்கித் திரையில் வெளிப்படுத்தும் நோக்கில், முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒரு பிரபல இயக்குநர் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படம் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது அமைப்பையோ தாக்கும் வகையில் இருக்காது என்றும், முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் உன்னதப் புகழைப் பரப்பும் விதமாகவே கதைக்ளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
