நாடு முழுவதும் அடுத்த அதிர்ச்சி... காவல் நிலையத்தில் வாலிபர் மரணம்; 8 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு!
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் கொடூரமாக நடந்துக் கொண்ட போலீசார் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தனது தீர்ப்பில் உறுதிப்படுத்திய நீதிபதி, பாதுகாக்க வேண்டிய போலீசார் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நிகழ்ந்த போலீஸ் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 8 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "இறந்தவர்களால் நீதி கேட்டு கதற முடியாது; அவர்களுக்காகப் போராடுவது நம் கடமை" என இந்த வழக்கில் நீதிபதிகள் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு, மும்பை வடலா ரயில்வே போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக அக்னெல்லோ வால்டாரிஸ் என்ற வாலிபரையும் அவரது நண்பர்கள் மூவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ் காவலில் இருந்த அக்னெல்லோ மர்மமான முறையில் உயிரிழந்தார். அக்னெல்லோ தப்பி ஓட முயன்றபோது ரயில் மோதி விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். ஆனால், போலீசார் அவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, கொடூரமான முறையில் சித்ரவதை செய்ததால்தான் அவர் உயிரிழந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், 2022-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட 8 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர ரத்தோடு உள்ளிட்ட 8 போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு, போலீசாரின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பளித்தனர். அக்னெல்லோ மற்றும் அவருடன் பிடிபட்டவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதை மருத்துவ ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் உறுதிப்படுத்துவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வாலிபரின் மரணம் கொலையா அல்லது விபத்தா என்பதில் போலீசார் கூறும் தகவல்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. "இறந்தவர்களுக்காக நீதி கேட்பது உயிரோடு இருப்பவர்களின் கடமை" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 8 போலீசார் மீதும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர ஆணையிட்டனர்.
