மெட்டாவில் அடுத்த அதிர்ச்சி... 16,000 ஊழியர்கள் பணிநீக்கம் - ஐடி துறையை ஆட்கொள்ளும் ஏஐ!
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), தனது ஊழியர் படையில் 20 சதவீதத்தை அதிரடியாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், மனித உழைப்பின் தேவை குறைந்து வருவதே இந்த மெகா பணிநீக்கத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மென்லோ பார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெட்டா நிறுவனத்தில் தற்போது சுமார் 79,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 16,000 பேரை அடுத்த சில மாதங்களில் வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வரும் மே மாதத்தில் மட்டும் சுமார் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், ஆட்களின் தேவை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் செலவுகளைப் பெருமளவு குறைக்க முடியும்" என மெட்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கொரோனா காலத்தில் 21,000 பேரை நீக்கிய மெட்டா, தற்போது ஏஐ பெயரில் மீண்டும் ஒரு பெரிய வேட்டைக்குத் தயாராகிவிட்டது.
மெட்டா மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ஆரக்கிள் (Oracle): 30,000 பேரை நீக்கத் திட்டம்; ஏற்கனவே 12,000 பேர் நீக்கம். அமேசான் (Amazon): அண்மையில் 16,000 பேர் பணிநீக்கம். யுனைடெட் பார்சல் சர்வீஸ் (UPS): 30,000 பேரை நீக்க முடிவு. பிபிசி (BBC): 2,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்.
கடந்த ஆண்டில் மட்டும் ஐடி துறையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 80,000 பேர் வேலையைத் தாரை வார்த்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், அது சாமானிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி வருவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
