அடுத்த அதிர்ச்சி.. சி.என்.ஜி. எரிவாயு விலை மீண்டும் உயர்வு... 11 நாட்களில் 4வது முறையாக மாற்றம்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரணச் சூழ்நிலைகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல்கள் காரணமாக, இந்தியாவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில், மாற்று எரிபொருளான சி.என்.ஜி. விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
பொதுத்துறை மற்றும் தனியார் எரிவாயு விநியோக நிறுவனங்கள் இன்று காலை முதல் சி.என்.ஜி. எரிவாயு விலையைக் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தி புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் காரணமாகக் காட்டி இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு மே மாதத்தில் மட்டும் இது 4-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் விலை மாற்றங்களின் காரணமாக, கடந்த 11 நாட்களில் மட்டும் சி.என்.ஜி. எரிவாயுவின் விலை ஒட்டுமொத்தமாகக் கிலோவுக்கு 6 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை உயர்விற்குப் பின், தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை 81.09 ரூபாயில் இருந்து 83.09 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகம், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கு ஏற்ப புதிய விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாற்றாகச் சிக்கனமான பொதுப் போக்குவரத்திற்காகச் சி.என்.ஜி. வாகனங்களுக்கு மாறிய ஆட்டோ, கார், இலகுரகப் சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டிகள் இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வால் பெரும் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தங்களது தினசரி வருவாயில் கணிசமான பகுதி எரிபொருளுக்கே செலவாவதால், வாழ்வாதாரத்தை நடத்தக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விலை உயர்வு மறைமுகமாக அத்தியாவசியப் பொருட்களின் செலவை அதிகரித்து, சந்தையில் சில்லறை விலை பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதாரப் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
