அடுத்த அதிர்ச்சி... எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சி.வி.சண்முகம் முடிவு!

 
சிவி சண்முகம் சிவி சண்முகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமை மீது ஏற்பட்டுள்ள  அதிருப்தி காரணமாக, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் பரிசீலித்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாகவே, இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடர் மற்றும் பேரவை நடவடிக்கைகள் எதிலும் அவர் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக அதிமுகவிற்குள் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, இந்த ராஜினாமா யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகத்தின் இந்த அதிருப்தி மற்றும் ராஜினாமா முடிவு குறித்த தகவல் அதிமுக தலைமைக்கு எட்டியதைத் தொடர்ந்து, கட்சியில் மேலும் பிளவு ஏற்படுவதைத் தடுக்க மூத்த நிர்வாகிகள் உடனடியாகக் களமிறக்கப்பட்டனர்.

கட்சியின் மிக முக்கிய மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்துப் பேசினர்.

சி.வி.சண்முகம்

தற்போதைய அரசியல் சூழலில் அவசரப்பட்டு எவ்வித இறுதி முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், உள்கட்சிப் பிரச்சினைகள் மற்றும் அதிருப்திகள் குறித்துப் பொதுச்செயலாளருடன் பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் சண்முகத்திடம் நீண்ட நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் தான் அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மாற்று முகாமிற்குச் சென்றிருந்த நிலையில், வட தமிழக அதிமுகவின் முக்கியத் தூணாகக் கருதப்படும் சி.வி.சண்முகமே அதிருப்தி காரணமாகப் பதவியை ராஜினாமா செய்யப் பரிசீலிப்பதாக விவாதிக்கப்படுவது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.