அடுத்த அதிர்ச்சி... அதி தீவிரமடையும் எல் நினோ... அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும்!
உலகம் முழுவதும் கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் 'எல் நினோ' நிகழ்வு இந்த முறை மிகவும் சக்திவாய்ந்ததாக உருவெடுத்து வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான வடிவத்தை எடுத்துள்ள எல் நினோ, வரும் மாதங்களில் மேலும் வலுப்பெற்று இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் தாக்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும், தீவிர வெப்ப அலைகளும் வீசக்கூடும். சில பிராந்தியங்களில் கடுமையான வறட்சியும், சில இடங்களில் கடுமையான புயல் மற்றும் வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்து கடுமையான வறட்சி மற்றும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ராபி பயிர்களுக்கான மழைப்பொழிவு குறைந்து, மிதமான குளிர்காலம் நிலவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எல் நினோ நிகழ்வால் பருவமழை பொய்த்து வறட்சி ஏற்பட்டு, பயிர் விளைச்சல் குறைவதுடன், பணவீக்கம் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் உருவாகும். இதன் மூலம் உலக பொருளாதாரத்தில் தோராயமாக ரூ.478 லட்சம் கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
