எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகினார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள், கட்சியின் மூத்த நிர்வாகியும், பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
'சின்ன கவுண்டர்', 'எஜமான்', 'பொன்னுமணி' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஆர்.வி.உதயகுமார், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் ஒரு தீவிர நட்சத்திரப் பேச்சாளராகவும், விசுவாசமான தொண்டராகவும் பயணித்து வந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்காகத் தொடர்ந்து களப்பணியாற்றி வந்த அவருக்கு, தற்பொழுது அதிமுகவின் மாநில கலைப்பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது தனது கலைப்பிரிவு செயலாளர் பதவியிலிருந்தும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது விலகல் குறித்து ஆர்.வி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் உட்கட்சி நிலவரங்கள் தனக்கு ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் கட்சியின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள், தங்களைப் போன்ற பல வருடங்களாக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறி, மனவருத்தத்துடனேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ஆர்.வி.உதயகுமாரின் இந்த திடீர் விலகல், அக்கட்சியின் கலைப்பிரிவினரிடையே தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அதிமுகவில் இருந்து விலகும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) நோக்கிப் பயணித்து வரும் சூழலில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்குவாரா அல்லது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
