தவெகவுக்கு அடுத்த அதிர்ச்சி... முசிறி எம்.எல்.ஏ மீது ரூ. 80 லட்சம் பணமோசடிப் புகார்!

 
முசிறி தவெக எம்.எல்.ஏ விக்னேஷ் முசிறி தவெக எம்.எல்.ஏ விக்னேஷ்

முசிறி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விக்னேஷ் மீது, கட்டுமானப் பணிகளுக்காகப் பெற்றுக்கொண்ட சுமார் 80 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாகத் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே. நகர் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் லட்சுமி என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2025-ஆம் ஆண்டு தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, 'CM பில்டர்ஸ்' நிறுவன உரிமையாளரான விக்னேஷை (தற்போது எம்.எல்.ஏ) அணுகியுள்ளார். அலுவலகப் பணிகளுக்காக வங்கியில் கடன் பெற்று, சுமார் 80 லட்சம் ரூபாயைப் பல்வேறு தவணைகளாக விக்னேஷிடம் வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட விக்னேஷ், ஆரம்பக்கட்ட பணிகளை மட்டும் செய்துவிட்டு, பெரும்பாலான பணிகளை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இது குறித்துக் கேட்டபோது பணத்தைத் திருப்பித் தர மறுத்ததோடு, சரியான பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கேக்

தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சுமி தரப்பு காவல் ஆணையரிடம் முறையிட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு போலீசார் விக்னேஷை அழைத்தபோது, "நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர்; முறையான சம்மன் இல்லாமல் விசாரணைக்கு வர முடியாது" என அவர் மறுத்ததாகத் தெரிகிறது.

இது குறித்துப் பேசிய லட்சுமி தரப்பு வழக்கறிஞர் கிஷோர், "ஊழலை ஒழிப்போம் என்று கூறும் தவெக-வினர், பதவி ஏற்பதற்கு முன்பே இப்படிப்பட்ட புகார்களில் சிக்குவது அதிர்ச்சியளிக்கிறது. விஜய் அவர்கள் வேட்பாளர்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்தார்.

விஜய்

ஏற்கனவே ராயபுரம் எம்.எல்.ஏ மீது வாளால் கேக் வெட்டியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், முசிறி எம்.எல்.ஏ மீதான இந்தப் பணமோசடிப் புகார் தவெக தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.