திமுகவினருக்கு அடுத்த அதிர்ச்சி... முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்!
அரசு ஒப்பந்தம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.3.35 கோடி மோசடி செய்ததாகவும், லாரிகளை வாங்கி கனிமவளக் கொள்ளைக்குப் பயன்படுத்தியதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் அருண்ராஜ் என்பவர், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் அவரது உதவியாளருக்கு எதிராக இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.

அரசு காண்ட்ராக்ட் எடுத்துத் தருவதாகக் கூறியதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் ரூ.1.25 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாக அருண்ராஜ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒப்பந்தப் பணிகளுக்காகத் தன்னை 9 லாரிகளை வாங்க வைத்ததாகவும், ஆனால் அந்த லாரிகளை முறையான பணிகளுக்குப் பயன்படுத்தாமல் மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் கொள்ளைக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனக்கு மொத்தம் ரூ.3.35 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொடுத்த பணத்தையும் லாரிகளையும் திரும்பப் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை 15 முறைக்கும் மேல் நேரில் சந்தித்துக் கேட்டதாகவும், ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகவும் அருண்ராஜ் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பணத்தைக் கேட்டு வலியுறுத்திய போது, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த ரூ.3.35 கோடி மோசடி மற்றும் கனிமவளக் கொள்ளைப் புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
