அடுத்த அதிர்ச்சி... இன்றிரவு கேரளா செல்கிறார் ஆளுநர் அர்லேகர்... பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் பயணம்!

 
விஜய் ஆளுநர் அர்லேகர் விஜய் ஆளுநர் அர்லேகர்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோர தவெக தயாராகி வரும் வேளையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு கேரளா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று இரவு 7:10 மணிக்கு சென்னையில் இருந்து கேரளாவுக்குப் புறப்படுகிறார். கேரளாவில் நடைபெற உள்ள புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அவர் கேரளா செல்கிறார்.

அங்கு புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகே அவர் தமிழகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் மேலும் சில நாட்கள் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைத் தொண்டர்களிடையே உருவாக்கியுள்ளது.

ஆளுநர் விஜய்

ஆளுநரின் பயணத் தகவல் ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்குப் புறப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் இல்லத்தில் முக்கிய சட்ட வல்லுநர்கள் அல்லது கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஆளுநர் 7:10-க்கு விமானம் ஏறுவதற்கு முன்பாக, அவரைச் சந்தித்து ஆதரவுக் கடிதங்களை வழங்க விஜய் தரப்பு முயற்சிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விஜய்

இன்னும் சில நிமிடங்களில் (மாலை 4 மணிக்கு) விசிக தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. விசிக-வின் இந்த அறிவிப்புதான் தமிழகத்தில் 'ஜனநாயக ஆட்சி அமையுமா' அல்லது 'ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா' என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருக்கும்.

ஆளுநர் கேரளா செல்வதற்குள் விஜய் தரப்பு உரிமை கோரத் தவறினால், நாளை சட்டமன்றப் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தமிழக அரசியல் சூழல் மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது.