அடுத்த அதிர்ச்சி... கேரளாவில் ஒரே நாளில் 11,776 பேர் மருத்துவமனையில் அனுமதி... வேகமெடுக்கும் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி!
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தொற்றுநோய்களின் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, 'லெப்டோஸ்பைரோசிஸ்' எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியிருப்பதுடன், காய்ச்சல் பாதிப்புக்காக ஒரே நாளில் 11,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது அம்மாநில சுகாதாரத்துறையை அதிர வைத்துள்ளது.
கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தற்போதைய அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் எலிக்காய்ச்சலின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 9 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், எலிக்காய்ச்சல் என்பது 'லெப்டோஸ்பைரா' என்ற பாக்டீரியாவால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் ஒருவிதப் பொதுவான தொற்று பாதிப்பாகும். தொற்று பாதித்த எலி மற்றும் நாய் போன்ற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள், தேங்கியுள்ள மழைநீர் அல்லது மாசுபட்ட சுற்றுச்சூழலுடன் மனிதர்களுக்கு ஏற்படும் நேரடித் தொடர்பின் காரணமாகவே இந்தத் தொற்று வேகமாகப் பரவுகிறது என்று எச்சரித்துள்ளது.
எலிக்காய்ச்சல் மட்டுமின்றி, மழைக்காலப் பருவநிலை மாற்றங்களால் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய பிற கடுமையான நோய்த்தொற்றுகளும் கேரளாவில் கணிசமாக அதிகரித்துள்ளன. சுகாதாரத்துறையின் தற்போதைய நிலவரப்படி, புதிதாக 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும், 8 பேருக்கு மலேரியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, குடல் தொற்றை ஏற்படுத்தக்கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா பாதிப்பு மேலும் 6 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிரட்டும் வகையில் உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 11,776 பேர் கடுமையான காய்ச்சல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகளுக்காகச் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கும் இடங்களில் பொதுமக்கள் வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
