தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... பார்சல் புக்கிங் கட்டணம் 15 % உயர்வு... புதிய கட்டண விபரம் வெளியீடு!

 
பார்சல் டெலிவரி புக்கிங் பார்சல் டெலிவரி புக்கிங்

மேற்காசிய நாடுகளில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் நேரடி எதிரொலியாக, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பொதுமக்களின் வயிற்றில் அடிப்பது போல் 6 முறை வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் எரிபொருள் விலை உயர்வு தற்போது அனைத்து அத்தியாவசியத் துறைகளையும் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான வணிக மையங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பார்சல் புக்கிங் நிறுவனங்களிலும், பார்சல்களை அனுப்புவதற்கான புக்கிங் கட்டணம் தற்போது 15 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அஞ்சல் அஞ்சலகம் தபால் பார்சல்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டதால், இந்தத் திடீர் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பார்சல் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைப்பட்டியலின்படி, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் 10 கிலோ எடையுள்ள பார்சலுக்கான கட்டணம் 175 ரூபாயில் இருந்து தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஈரோடு - திருச்சிக்கு 150 ரூபாயாக இருந்த கட்டணம் 170 ரூபாயாகவும், ஈரோடு - கோவைக்கு 100 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 125 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

 ஜவுளி உற்பத்தி தொழில்

ஏற்கனவே சுங்கக் கட்டண உயர்வு மற்றும் உதிரிப் பாகங்களின் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது பார்சல் புக்கிங் கட்டணமும் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது ஜவுளி மற்றும் மஞ்சள் தொழிலைச் சார்ந்த ஈரோடு மாவட்ட சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும், கூடுதல் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.