அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திடீர் விலகல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்து, கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எஸ்.எம். ஆனந்தன் அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் அ.தி.மு.க நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாக அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திருப்பூர் மாநகர அ.தி.மு.க-வில் நிலவி வரும் கடுமையான உட்கட்சிப் பூசல்கள் மற்றும் குளறுபடிகள் குறித்துப் பலமுறை தலைமைக்குச் சுட்டிக்காட்டியும், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ரத்தம் சிந்தி உண்மையாக உழைத்த விசுவாசிகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய ஒரு சுயநலக் கூட்டத்தை மட்டுமே தற்போதைய தலைமை பாதுகாத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
#NewsUpdate | எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்படுவதாகக் கூறி, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்#SunNews | #ADMK pic.twitter.com/3NIZ17RWrn
— Sun News (@sunnewstamil) July 1, 2026
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்து முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.எம். ஆனந்தன், தனது நீண்ட கால அரசியல் பயணத்தை இக்கடிதத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
"கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கிளைக் கழகச் செயலாளர் முதல் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு உயர் பதவிகளைப் பெற்று விசுவாசமாகப் பணியாற்றியுள்ளேன். ஆனால், தற்போது எதிர்க்கருத்து சொல்பவர்களைத் துரோகிகளாகச் சித்திரரித்து வெளியேற்றி வரும் தலைமையின் கீழ் நீடிக்க விரும்பவில்லை."

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் தவெக தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வரும் தற்போதைய சூழலில், திருப்பூரின் முக்கிய அ.தி.மு.க முகமான எம்.எஸ்.எம். ஆனந்தனின் இந்த திடீர் விலகல், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாகத் ஆளுங்கட்சியான தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.
