திமுகவில் அடுத்த அதிர்ச்சி... துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. ரூ.1,427 கோடி ஊழல் வழக்கில் 34 இடங்களில் சோதனை!
திமுக முன்னாள் அமைச்சரும் நீர்வளத்துறை முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை, சென்னை தமிழ் செல்வன் மற்றும் 'அறப்போர் இயக்கம்' ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (குற்ற எண்: 08/2026) இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் ஏ. முத்தையா, ராமமூர்த்தி உட்பட நீர்வளத்துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள்/நிறுவனங்கள் எனப் பலரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் 28 ஆற்று மணல் குவாரிகளில் வெளிப்படையான டெண்டர் முறையைப் பின்பற்றாமல் முறைகேடாக ஒப்பந்தங்களை வழங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளியது, மற்றும் போலியான அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக மணல் கடத்தியது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்ட 28 குவாரிகளில் 4 குவாரிகளிலேயே அரசுக்கு ரூ.1,427,34,23,059/- வரை தவறான வழியில் பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வழக்கின் தொடர்ச்சியாக, இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, வேலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 34 இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது வழக்குத் தொடர்பான 825 முக்கிய ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
