திரையுலகில் அடுத்த அதிர்ச்சி... நடிகர் முத்துக்காளை மனைவி மாலதி காலமானார்... சொந்த ஊரில் இன்றிரவு இறுதிச்சடங்கு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீருடனும் உருக்கமாகவும் வேண்டுகோளை விடுத்திருந்த நிலையில், கடந்த 19 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த மாலதி, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
சினிமா மீது கொண்ட அதீத காதலால் தனது இளம் வயதிலேயே சென்னைக்கு வந்த முத்துக்காளை. தனது 18 வயதில் கராத்தே தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்ற அவர், முதலில் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராகவும், பின்னர் பல படங்களில் தனது அசாத்திய நகைச்சுவை நடிப்பின் மூலமாகவும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் திரைப்பட ஸ்டண்ட் கலைஞரும், நகைச்சுவை நடிகருமான முத்துக்காளையின் மனைவி எம். மாலதி (47) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 9 மணியளவில் காலமானார். இந்தத் துயரச் சம்பவம் சினிமா வட்டாரத்திலும் அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19 நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மாலதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. மாலதியின் மறைவைத் தொடர்ந்து, அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி (திருக்கோதையாபுரம்) பகுதியில் இன்றிரவு இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெறவுள்ளது. முத்துக்காளையின் மனைவி மறைவுக்குப் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்களும், ஸ்டண்ட் கலைஞர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த முத்துக்காளை, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து தனது கவனத்தைக் கல்வியின் பக்கம் திருப்பினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூலமாகத் தனது விடாமுயற்சியால் கடந்த 2017 ஆம் ஆண்டு இளங்கலை வரலாறும், 2019 ஆம் ஆண்டு தமிழில் முதுகலை பட்டமும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் தான் இளங்கலை தமிழ் இலக்கியப் படிப்பிலும் 58 ஆவது வயதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து சாதனை படைத்தார். கல்வி மூலம் வாழ்வில் வென்ற இவருக்கு, அண்மைக்காலமாகச் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தனது மனைவியின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய்யின் உதவியை நாடி முத்துக்காளை உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுருந்தார். அதில், எனது மனைவி மாலதிக்குத் தலையில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு காரணமாகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அறுவைச் சிகிச்சை முடிந்து தற்போது 19 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆபரேஷன் செய்ததில் ஏற்பட்ட நுரையீரல் தொற்று உட்பட சில சிறிய உடல்நலத் தொற்றுகள் காரணமாக மூச்சுவிடுவதற்குக் கடுமையான சிரமங்களைச் சந்தித்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
