திருவள்ளூரில் அடுத்த அதிர்ச்சி... ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ராட்சத பாய்லர் திடீரென வெடித்துச் சிதறிய கோர விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு ராட்சத பாய்லர் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் தாக்கத்தால், அந்த ஆலையில் வேலை செய்து வந்த ரவி என்ற வடமாநில தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாய்லர் வெடித்த வேகத்தில் ஆலைக்குள் தீ மளமளவெனப் பரவி கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் ஆலைக்குள் இருந்த மேலும் 4 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் அலறினர்: விபத்து குறித்துத் தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையாகப் போராடி தொழிற்சாலையில் பரவிய தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீக்காயமடைந்த 4 தொழிலாளர்களையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பாய்லர் வெடிப்பிற்கான துல்லியமான காரணம் என்ன, போதிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
