அடுத்த அதிர்ச்சி... "சேலை கொடுத்தா போதுமா? பாவாடை வேண்டாமா?” - திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை வீடியோ!

 
திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்செல்லாம் ஒரு பேச்சா... இதோ நான் பேசுறேன் பாருங்க...” என்று வடிவேலு பாணியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வாண்டடாக வண்டியில் ஏறுவார்கள் போல.

சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் இலவச சேலை வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், சேலைக் கொடுத்தா மட்டும் போதுமா? பாவாடை இல்லாமல் சேலையை எப்படிக் கட்டுவது என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய விதம் அநாகரிகமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், திமுக அரசு வழங்கும் இலவசப் பொருட்களை விமர்சித்துப் பேசினார். அப்போது அவர், "ஏற்கனவே 100 ரூபாய்க்கு ஹாட் பாக்ஸ் கொடுத்து ஏமாற்ற நினைக்கிறார்கள். இப்போது இலவசமாகச் சேலை மட்டும் கொடுத்தால் போதுமா? அதை எப்படிப் பாவாடை இல்லாமல் கட்டுவது என்று பெண்கள் கேட்கிறார்கள்"  என்று பெண்களின் உடை குறித்து அவர் பொதுமேடையில் இத்தகைய உதாரணத்தைப் பயன்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொங்கல்

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தேர்தல் உத்திகளைக் கடுமையாகச் சாடினார். "நம்முடைய வரிப் பணத்தை நமக்கே கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள். எங்களைப் பார்த்து அடிமை ஆட்சி என்று சொல்லும் திமுக, அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டும் சரியாகுமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அநாகரிகமாகப் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இப்போது மூத்த தலைவரான திண்டுக்கல் சீனிவாசனும் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"பெண்களின் கண்ணியத்தைப் போற்றும் வகையில் பேச வேண்டிய பொதுவாழ்வில் இருப்பவர்கள், இது போன்ற தரம் தாழ்ந்த உதாரணங்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது" எனப் பல அரசியல் கட்சிகளின் பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.