அடுத்த அதிர்ச்சி... இனி பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் - தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 நிர்ணயம்!
தமிழகத்தில் சொத்து மற்றும் திருமணப் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில், 5 இடங்களில் புதிய மாதிரி ஆவணப் பதிவு மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களையும் அரசு நிர்ணயித்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.7.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் வரவேற்பைப் பொறுத்து, மேலும் 20 இடங்களுக்கு திட்டத்தை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய மையங்களில் ஒரு ஆவணம் அல்லது திருமணப் பதிவுக்கான வசதிக் கட்டணம் நான்கு வகைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சேவைக்கு ரூ.2,000, தட்கல் வழக்கமான சேவைக்கு ரூ.5,000, பிரீமியம் சேவைக்கு ரூ.5,000, தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணங்கள் மையத்தின் சேவைக்கான வசதிக் கட்டணங்கள் மட்டுமே. இதனுடன் வழக்கம்போல் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

தனியார் நிறுவனம் மையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் செயலாக்க உதவிகளை மட்டும் கவனிக்கும் என்றும், பத்திரப்பதிவுக்கான அதிகாரம் அரசு அதிகாரிகளிடமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மையங்களும் 180 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும். இதற்கிடையே, கூடுதல் கட்டணச் சுமை மற்றும் தனியார்மயமாக்கல் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
