அடுத்த அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் நோயாளியின் 2.25 சவரன் நகையைத் திருடிய நர்ஸ்!
சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் மருத்துவப் பரிசோதனையின் போது 2.25 பவுன் நகையைத் திருடிவிட்டுத் தலைமறைவாகி இருந்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கவுசல்யா (50) என்பவர், கடந்த ஜூன் 6-ஆம் தேதி ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 8-ஆம் தேதி கவுசல்யாவுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்படவிருந்தது. அப்போது பரிசோதனைக்குச் செல்லும் முன்பு பாதுகாப்புக்காகக் கவுசல்யாவின் 2.25 பவுன் நகைகளைத் தற்காலிகமாகப் பெற்றுக் கொள்வதாகக் கூறி, அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜோதி (32) என்பவர் வாங்கியுள்ளார்.

பரிசோதனை முடிந்து திரும்பிய கவுசல்யா தன்னிடம் இருந்த நகைகளைத் திருப்பிக் கேட்டபோது, செவிலியர் ஜோதி நகைகளைத் தர மறுத்ததுடன் முறையான பதிலும் அளிக்காமல் திடீரெனத் தலைமறைவானார். இது குறித்து பாதிக்கப்பட்ட கவுசல்யா ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராயபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தலைமறைவாகிவிட்ட செவிலியர் ஜோதியைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மீஞ்சூரில் பதுங்கியிருந்த செவிலியர் ஜோதியை ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்த நகைகள் குறித்தும், வேறு எங்கு இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையிலேயே நோயாளிவிடம் செவிலியரே நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
