அடுத்த அதிர்ச்சி... பனீர், வெண்ணெய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் உற்பத்தியை நிறுத்தியது ‘ஆவின்’ நிறுவனம்!

 
ஆவின்

தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் புகழ்பெற்ற ‘ஆவின்’ நிறுவனம், பொதுமக்கள் மத்தியில் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் பெற்றிருந்தாலும், தற்போது கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆவின் மூலமாகத் தயாரிக்கப்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ‘ஆவின்’ அமைப்பு வாயிலாகத் தினமும் சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பால் குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கொழுப்புச்சத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, தினசரி விற்பனைக்குப் போக மிஞ்சும் பாலைக் கொண்டு தயிர், பனீர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, மோர், யோகர்ட், பால் பவுடர் உள்ளிட்ட 230-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த காலங்களில் ஆவின் நிறுவனத்தின் இத்தகைய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் மாதந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆவின்

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிக வரவேற்பைப் பெற்றுவந்த பனீர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது ஆவின் வாடிக்கையாளர்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவற்றுடன் சேர்த்து பல்வேறு வகையான மில்க் ஷேக்குகள், பால் பவுடர் வகைகள், பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் மிக்ஸ் பவுடர்கள், குக்கீஸ் மற்றும் சாக்லேட்டுகள் உள்ளிட்ட பல முக்கியப் பொருட்களின் தயாரிப்பும் கைவிடப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பாலகங்களுக்குப் பொருட்களை வாங்கிச் செல்ல ஆர்முடன் செல்லும் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்க நிலை காரணமாக, அந்த இடத்தை நிரப்பப் பிற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. குஜராத்தைச் சேர்ந்த பிரபல ‘அமுல்’ மற்றும் கர்நாடகாவின் ‘நந்தினி’ பால் கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் தமிழக சந்தைகளில் தங்களது விற்பனையைத் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற மாநில பிராண்டுகள் தமிழகச் சந்தையின் பெரும்பகுதியை மெல்லக் கைப்பற்றி வருவதாகப் பொருளாதார நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆவின்

தமிழகத்தின் பாரம்பரியமான ஆவின் நிறுவனத்தின் விற்பனைச் சந்தை சரிவைச் சந்திக்கும் இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நிறுவனம் மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்ற கவலை எழுந்துள்ளது. எனவே, பொதுமக்களின் நல்வாழ்வையும், பால் உற்பத்தியாளர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் ஆவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து, முந்தைய உற்பத்தியைத் தீவிரப்படுத்த முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.