அடுத்த அதிர்ச்சி... தவெக கொடி நிறத்திற்கு மாறிய காவல்துறை நிழற்குடை.... எதிர்ப்பு வலுத்ததால் அகற்றம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்துறை நிழற்குடைக்கு ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) கட்சிக் கொடி வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த நிழற்குடை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் காவலர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையைப் புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதற்கான செலவை உள்ளூர் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பொதுவாகக் காவல்துறைக்கு உரிய வழக்கமான வண்ணங்களுக்குப் பதிலாக, இந்த நிழற்குடைக்குத் த.வெ.க கட்சியின் கொடி நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது.

ஆளும் கட்சித் தலைமையைக் கவருவதற்காகக் காவல்துறையினர் சிலர் தன்னிச்சையாக த.வெ.க கட்சி நிறத்தை அடிக்கச் சொன்னதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி விமர்சனங்களை உருவாக்கியது.
சர்ச்சை வலுத்ததைத் தொடர்ந்து, த.வெ.க நிறத்தில் புதுப்பிக்கப்பட்ட அந்தப் போலீஸ் நிழற்குடை அங்கிருந்து உடனடியாக முழுமையாக அகற்றப்பட்டு, தற்போது அந்த இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை சார்ந்த அமைப்புகளுக்கு அரசியல் கட்சி வர்ணம் பூசியதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
