உலக நாடுகளிடையே அடுத்த அதிர்ச்சி... அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சீனா சோதனை!

 
ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் சீனா

பசிபிக் மற்றும் தென்சீன கடல் பகுதிகளில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், தற்காப்புப் படைகளைப் பலப்படுத்தவும் சீனா தொடர்ந்து பல்வேறு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது தென் பசிபிக் கடல் பகுதியில் அணு ஆயுத வல்லமை பெற்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சீனா புதிய சோதனை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணைச் சோதனையானது சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் தேவையற்ற பதற்றத்தையும், பிராந்திய அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதாக அண்டை நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

சீனாவின் இந்தத் திடீர் ஏவுகணை சோதனைக்குப் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களை பதிவு செய்துள்ளன. முன்கூட்டியே முறையான அறிவிப்புகள் இன்றி நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விதிகளுக்கு முரணானது என அந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், இந்தச் சோதனையானது தனது வழக்கமான ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதிதான் என்றும், எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பசிபிக் கடல் பகுதியில் தற்போது பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.