அடுத்த ஷாக்... ஏப்ரல் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்.. 28 சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை!

 
டோல்கேட் டோல்கேட்

தமிழக வாகன ஓட்டிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் மற்றுமொரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. கோடைக்கால பயணங்களுக்குத் திட்டமிடும் வேளையில், சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தின் 28 முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் கட்டணங்களை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான புதிய கட்டணப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாகன வகைகளைப் பொறுத்து 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டணம் எகிறப்போகிறது.

சொந்தக் காரில் குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்களுக்கு இது பெரும் சுமையாக அமையப்போகிறது. ஒரு முறை சுங்கச்சாவடியைக் கடப்பதற்கான கட்டணம் தற்போது உள்ளதை விட 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக ரீதியான வாகனங்களுக்கு இந்த அடி இன்னும் பலமாக விழுந்துள்ளது. பேருந்து மற்றும் லாரிகளுக்கான கட்டணம் ஒரு முறை பயணத்திற்கு 50 ரூபாய் முதல் 20ராக் 200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இது மறைமுகமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, சந்தையில் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும்.

சுங்கசாவடி டோல்கேட்

தமிழகத்தில் எந்தெந்த டோல்கேட்கள்?

சென்னையைச் சுற்றியுள்ள மிக முக்கியமான சுங்கச்சாவடிகளான பரனூர், சூரப்பட்டு, வானகரம் ஆகியவற்றில் இந்த கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள திண்டிவனம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சமயபுரம், கப்பலூர் மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண வசூல் வேட்டை ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது.

மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்:
அடிக்கடி பயணம் செய்யும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை உயர்த்தப்படலாம். மேலும், ஓராண்டிற்கு 200 முறை பயணம் செய்யக்கூடிய வருடாந்திர பாஸ் கட்டணம், தற்போதுள்ள 3,000 ரூபாயில் இருந்து 3,100 ரூபாயாக உயரவுள்ளது.

சுங்கச்சாவடி

டிஜிட்டல் மயம்: ரொக்கப் பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி?
கட்டண உயர்வைத் தாண்டி மற்றுமொரு முக்கியமான மாற்றத்தையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் நிலவும் காலதாமதத்தைத் தவிர்க்க, ரொக்கப் பணம் (Cash) பெறும் முறையை முழுமையாக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இனிமேல் FASTag அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே கட்டணத்தைச் செலுத்தும் கட்டாயம் உருவாகலாம். ஏற்கனவே பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய நடைமுறை வாகன ஓட்டிகளை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாமானியர்களின் கவலை:
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திணறி வரும் லாரி உரிமையாளர்கள், இந்த டோல்கேட் கட்டண உயர்வால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என அச்சப்படுகின்றனர். "டோல்கேட் கட்டணம் உயரும்போது, லாரி வாடகை உயரும், அதன் விளைவாக சாமானிய மக்கள் வாங்கும் ஒரு கிலோ தக்காளி முதல் அரிசி வரை அனைத்தின் விலையும் ஏறும்" என்பதே நிதர்சனமான உண்மை.

சுங்கச்சாவடி ஒப்பந்தங்கள் முடிந்த பிறகும் பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த புதிய உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.