அடுத்த அதிர்ச்சி... ஈரானைத் தொடர்ந்து கியூபாவை குறிவைக்கும் டிரம்ப்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தைத் தொடர்ந்து கியூபா மீதும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். கியூபாவின் தற்போதைய கம்யூனிச ஆட்சி விரைவில் வீழ்ச்சியடையும் என்றும், அந்த நாட்டைத் தான் "கவனித்துக் கொள்ளப் போவதாகவும்" சமீபத்தில் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

"கியூபா விரைவில் வீழும். அவர்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆவலாக உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக நான் இதைக் கவனித்து வருகிறேன், இப்போது அது என் கையில் வந்து விழுந்துள்ளது" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் ஈரானின் மீதே இருப்பதாகவும், அந்த விவகாரத்தை முடித்த பிறகு கியூபா மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்தால் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே ஈரானை முடித்துவிட்டு கியூபாவைக் கவனிப்போம்" என்பது அவரது நிலைப்பாடாக உள்ளது.

கியூபா இருள்

கியூபா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, கியூபா தொடர்பான விவகாரங்களில் மிகச்சிறப்பாகச் செயல்படுவதாக டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எரிபொருள் தடையால் கியூபா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு வரும் எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.

எரிபொருள் இல்லாததால் கியூபாவின் பல பகுதிகளில் 20 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் பாதுகாப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த ஜனவரியிலேயே எச்சரித்திருந்தார். இதன் விளைவாக மெக்சிகோ போன்ற நாடுகள் கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.

டிரம்ப் போர்

ஈரானில் ஆட்ச மாற்றத்திற்கான (Regime Change) வேலைகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதே போன்ற ஒரு நடவடிக்கையை கியூபாவிலும் டிரம்ப் முன்னெடுப்பாரோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இதை டிரம்ப் "நட்பு ரீதியான கையகப்படுத்துதல்" என்று குறிப்பிட்டாலும், இது ஒரு மறைமுகப் போர் நடவடிக்கை என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர்.